திடீரென்று வெடித்துச் சிதறலாம் – மேக்புக் ப்ரோ மாடல்களை திரும்ப கேட்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்த 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி பயன்படுத்தும் போது திடீரென அதிக சூடாகி அவை தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட லேப்டாப்களை வாடிக்கையாளர்கள் சீரியல் நம்பர் கொண்டு கண்டறிந்து கொள்ள முடியும் என ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ பயன்படுத்துவோர் தங்களின் சாதனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, திரையின் இடதுபுறம் மேல்பக்கத்தில் இருக்கும் ஆப்பிள் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். மேக்புக் ப்ரோ மாடல்களை வைத்திருப்பவர்கள் தங்களது சீரியல் நம்பரை அதற்கென வழங்கப்பட்டு இருக்கும் பகுதியில் பதிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியுமா என தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மேக்புக் ப்ரோ யூனிட்களை பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்கள் தவிர திரும்பப் பெறும் அளவு எந்த சாதனங்களும் பாதிக்கப்படவில்லை.

முன்னதாக இதேபோன்ற பிரச்சனை காரணமாக சாம்சங் தனது கேலக்ஸி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. இவற்றின் பேட்டரியில் ஏற்பட்ட பிழை காரணமாக ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றின் விற்பனையும் நிறுத்தப்பட்டது.