13 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் – விவோ அசத்தல்

விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா (MWC 2019) ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. ஜூன் 26 ஆம் தேதி துவங்கும் இவ்விழா ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இவ்விழாவில் விவோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் விவோ நிறுவனம் ஜனவரி மாதம் அறிமுகம் செய்த அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனின் உற்பத்தி செய்யப்பட்ட மாடலையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர விவோ 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

Vivo-5G-Teaser

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். இதே பேட்டரி முழுமையாக தீர்ந்து போகும் பட்சத்தில் வெறும் 14 நொடிகளில் 2.38 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகிவிடும். ஒப்போவின் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்கிறது.

விவோவின் அபெக்ஸ் 2019 வெறும் கான்செப்ட் போன் ஆகும். இதன் வெளியீடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம். விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போன் நாட்ச் அல்லது பன்ச் ஹோல் போன்ற வடிவமைப்புகள் இன்றி, ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை அபெக்ஸ் 2019 மாடலில் 5ஜி சப்போர்ட், குவால்காமின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடெம், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 256 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.