இன்னும் நான்கு வாரங்களில் இந்தியா வரும் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமானது முதல் இதன் இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சியோமி நிறுவனம் கே20 சீரிஸ் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என கூறும் டீசர் ஒன்றை வெளியிட்டது.

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், ரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி கேட்கும் போது, சரியான தேதியை குறிப்பிடாமல் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என மனு குமார் ஜெயின் தெரிவித்தார். ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி அவர் முதல் முறையாக தகவல் வழங்கி இருக்கிறார். அந்த வகையில் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகலாம்.