இனி ட்ரூகாலர் கொண்டு போன் பேசலாம்

ட்ரூகாலரில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் சேவை சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதியை ட்ரூகாலர் அனைவருக்கும் வழங்குகிறது.

வாய்ஸ் கால் சேவையை அதிகாரப்பூர்வமாக வழங்குவதாக ட்ரூகாலர் அறிவித்துள்ளது. இந்த சேவையை ட்ரூகாலர் வாய்ஸ் என அழைக்கப்படுகிறது. புதிய சேவையை பயன்படுத்த செயலியினுள் வாய்ஸ் கால் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்து மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ட்ரூகாலர் வாய்ஸ் சேவையை இலவசமாக அதிக தரமுள்ள (HD), குறைந்த லேடென்சியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேவையை மிக எளிமையாக இயக்க வாய்ஸ் ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. இதில் இன்-ஆப் லொகேஷன்களான கால் லாக்ஸ், எஸ்.எம்.எஸ். இன்பாக்ஸ், காண்டாக்ட் ப்ரோஃபைல் மற்றும் கால் ஸ்கிரீன் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் இந்த அம்சம் ட்ரூகாலர் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கருதப்பட்டது. தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ட்ரூகாலர் வாய்ஸ் கால் வசதி ஜூன் 10 ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாய்ஸ் கால் அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துவோர் ட்ரூகாலர் வாய்ஸ் ஷார்ட்கட்டை செயலியில் பார்க்க முடியும். ஒருவேளை இந்த அம்சம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் இது வழங்கப்படலாம்.

இந்த அம்சம் ட்ரூகாலர் பிரீமியம் அல்லது பிரீமியம் கோல்டு சந்தா வைத்திருப்போர் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் கால் வசதி விரைவில் ஐ.ஒ.எஸ். பதிப்பிற்கும் வழங்கப்படும் என ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.