அந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வராதா?

சாம்சங் நிறுவன அதிகாரியின் சமீபத்திய பேட்டி அதன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கொரியன் ஹெரால்டு பத்திரிகைக்கு பேட்டியளித்த சாம்சங் அதிகாரி ஒருவர், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிரச்சனை துவங்கிய இடத்தில் அப்படியே தான் இருக்கிறது என தெரிவித்தார். இது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

முன்னதாக தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மே மாத இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என சாம்சங் தெரிவித்து இருந்தது. பின் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டு, அது உறுதியானதில் இருந்து சாம்சங் தரப்பில் இருந்து மவுனம் மட்டுமே ஒற்றை மந்திரமாக இருக்கிறது.

சாம்சங் வரலாற்றில் சிறப்புமிக்க சாதனமாக இருக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதன் பிரியர்களுக்கு சோகம் கலந்து ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. சாம்சங் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

எதுவாயினும் கேலக்ஸி ஃபோல்டு திட்டம் பல்வேறு நிறுவனங்களை இதுபோன்ற சாதனத்தை உருவாக்கும் முயற்சிகளில் இறங்க நிர்பந்தித்தது. மேலும் அவர்களின் வெளியீட்டை வேகப்படுத்தவும் சாம்சங் முக்கிய காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

சாம்சங் எதிர்கொண்ட பிரச்சனையை கண்ட மற்ற நிறுவனங்களுக்கு அச்சம் தொற்றிக் கொண்டிருக்கிறது (ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது) இதன் காரணமாக இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பம் நம் கைகளை வந்தடைவதில் மேலும் காலதாமதமாகும் என தெரிகிறது.

மிகவும் சுவாரஸ்யமாக துவங்கிய அதிநவீன தொழில்நுட்பம் யாரும் எதிர்பாராத வகையில் உருவாகி தற்சமயம் தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் வெளியீடு தாமதமாகியுள்ளது. இது மீண்டும் எப்போது வெளியாகும் என்ற ரகசியம் அந்தந்த நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் திட்டத்தை வெளிக்கொண்டு வந்த சாம்சங், தற்சமயம் தடுமாற்றத்தில் சிக்கித்தவிக்கிறது. இதனால் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு ஆப்பிள் நிறுவனத்தின் மீது எழுந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், இதன் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Photo Courtesy: MKBHD