மைக்ரோசாஃப்ட் புதிய அப்டேட்டில் தமிழ் உள்பட பத்து இந்திய மொழி வசதி அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மே 2019 அப்டேட்டை கடந்த மாதம் வழங்கியது. இதில் லைட் தீம், கௌமோஜி சப்போர்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டன. இந்த அப்டேட்டின் மற்றொரு அங்கமாக ஸ்மார்ட் ஃபொனடிக் கீபோர்டுகளை மைக்ரோசாப்ட் பத்து இந்திய மொழிகளில் வழங்கி இருக்கிறது. இவை இயற்கை உச்சரிப்பை சார்ந்து உருவாக்கப்பட்டு இருப்பதால் பயனர்கள் இதை மிக எளிமையாக பயன்படுத்த துவங்கிவிடலாம்.

மேம்படுத்தப்பட்ட ஃபொனடிக் கீபோர்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், பங்களா, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா மற்றும் இந்தி என மொத்தம் பத்து இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அவர்களின் தாய் மொழியிலேயே இனி பணியாற்ற முடியும். இதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹார்டுவேர் கீபோர்டுகளை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. இத்துடன் மொழி மாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை ஏற்கனவே இருக்கும் கீபோர்டுகளில் இன்புட் செய்து அவற்றை மிக எளிமையாக ஒரு ஸ்கிரிப்ட்டில் இருந்து மற்றொன்றிற்கு எழுத்துக்களாக மாற்ற முடியும்.

புதிய அம்சம் டைப்பிங் வேகம் மற்றும் இந்திய மொழி பயன்பாட்டை குறைந்தபட்சம் 20 சதவிகிதம் வரை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய இன்டிக் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் இன்டிக் லாங்குவேஜ் இன்புட் டூல் எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. புதிய அம்சம் இருப்பதால் இனி எவ்வித மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மேம்படுத்தப்பட்ட கீபோர்டுகள் புதிய விண்டோஸ் 10 அப்டேட் (19H1) மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அப்டேட் செய்யாத பயனர்கள் செட்டிங்ஸ் — அப்டேட்ஸ் & செக்யூரிட்டி — விண்டோஸ் அப்டேட் ஆப்ஷன்களை க்ளிக் செய்து தங்களின் இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளலாம். அப்டேட் இன்ஸ்டால் ஆனதும் ஃபொனடிக் கீபோர்டுகளை ஆக்டிவேட் செய்யலாம்.