ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்

ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனது விர்ச்சுவல் பணம் பற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு அறிவிக்கும் என தெரிகிறது.

இதில் பிட்காயின் போன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஃபேஸ்புக் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற கன்சோர்டியம் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதில் விசா, மாஸ்டர்கார்டு, பேபால் மற்றும் உபெர் என பல்வேறு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.

இந்த கன்சோர்டியத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி டாலர்களை முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

சமீப காலங்களில் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஃபேஸ்புக் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் உருவாக்கும் கன்சோர்டியம் வெளிப்புறமாக இயக்கப்படும் என்றும் இதன் மீது நம்பகத்தன்மையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் என தெரிகிறது.

முன்னதாக அமெரிக்க கருவூலம் மற்றும் இங்கிலாந்து வங்கி உள்ளிட்டவை ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சிக்கு அனுமதியளித்து இருப்பதாக தகவல் வெளியானது.

ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி மூலம் பயனர்கள் ஷாப்பிங், செயலிகள் மற்றும் கேமிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. ஆசியாவில் இந்த சேவைக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. க்ரிப்டோகரென்சி திட்டம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.