அமேசான் இந்தியாவில் பார்ட்-டைம் பணி: 60 நிமிடங்களுக்கு ரூ.140 வருமானம் பெறலாம்

அமேசான் இந்தியா நிறுவனம் புதிதாக அமேசான் ஃபிளெக்ஸ் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. பயனர்கள் இதில் கலந்து கொண்டு பகுதி நேரத்திற்கு டெலிவரி செய்தால், வருவாய் ஈட்ட முடியும். ஃபிளெக்ஸ் திட்டத்தில் இணைவோர் அவரவர் விரும்பும் நேரத்தில் வேலை செய்தாலே போதுமானது என அமேசான் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தில் சேர்வோர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.140 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை பெறலாம். அமேசான் ஃபிளெக்ஸ் சேவையில் கலந்து கொண்டு பொருட்களை டெலிவரி செய்ய விரும்புவோர் முதலில் செயலி ஒன்றை தரவிறக்கம் செய்ய வேண்டும். இதுதவிர சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். இதுதவிர கையில் ஆண்ட்ராய்டு போன் ஒன்றும் வைத்திருக்க வேண்டும்.

தற்சமயம் ஆண்ட்ராய்டு ஃபிளெக்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. புதிய திட்டத்தில் பல ஆயிரம் பேர் இணைந்து கொண்டு பகுதி நேர பணிகளை மேற்கொள்வர் என அமேசான் எதிர்பார்க்கிறது. பயனர்கள் அவரவருக்கு கிடைக்கும் நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்து வருவாய் ஈட்ட முடியும்.

முதற்கட்டமாக அமேசான் ஃபிளெக்ஸ் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. அதன் பின் மற்ற நகரங்களில் துவங்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அமேசான் ஃபிளெக்ஸ் வலைதளத்தில் தங்களின் விவரங்களை பதிவிட்டு திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் அமேசான் ஃபிளெக்ஸ் திட்டம் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவில் அமேசான் ஃபிளெக்ஸ் திட்டத்தில் கலந்து கொள்வோருக்கு விபத்துக் காப்பீடு திட்டம் வழங்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. ஃபிளெக்ஸ் திட்டத்தில் இணைவோர் முழுமையான விசாரணைக்கு பின்னரே டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.