இனி அப்படி நடக்காது – உறுதியளிக்கும் சியோமி

சியோமி நிறுவன சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சந்தையில் களமிறங்கிய மிகக் குறைந்த காலக்கட்டத்திலேயே சியோமி நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறது. எனினும், சியோமி சாதனங்களில் பெரும்பாலானோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு அதன் MIUI யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு விளம்பரங்கள் தோன்றுவது தான்.

தலைசிறந்த சிறப்பம்சங்கள் நிறைந்த சாதனங்களை சரியான விலையில் வழங்கும் சியோமி யூசர் இன்டர்ஃபேசில் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் தனது வருவாயை ஈடுகட்டிக் கொள்கிறது. எதுவாயினும், ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை பார்ப்பது அதன் பயனர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் தான் இருக்கிறது.

பயனர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்க்கும் வகையில் சியோமி தரப்பில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் வெளியிட்ட அறிக்கையில், விளம்பரங்கள் தோன்றும் பிரச்சனையை சரி செய்வதற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

தற்சமயம் சியோமியின் இணைய சேவைகள் பிரிவுக்கான பொது மேலாளர் MIUI தளத்தில் விளம்பரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் விளம்பரங்களை மறைக்கும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சியோமி ஏற்கனவே விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது. வரும் மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை மேலும் குறையும் என கூறப்படுகிறது. இதுதவிர விளம்பரங்களை மறைப்பதற்கென MIUI தளத்தில் புதிய வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு மிக எளிமையாக விளம்பரங்களை மறைக்க முடியும்.

பிரவுசர்களில் ஆபாச விளம்பரங்கள் தோன்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சியோமி அறிவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும். இதுதவிர MIUI தளத்தில் தோன்றும் விளம்பரங்களை முறைப்படுத்தும் வழிமுறைகள் நடைபெறுவதாக தெரிகிறது. இதனால் விளம்பரங்களை வழங்குவோர் கடின விதிமுறைகளை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.