64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றில் 64 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் இதர சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் வெளியாகும்.

அந்த வகையில் இது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம். இதில் சியோமியை முந்தி 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் முதலில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Samsung ISOCELL Bright GW1

64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சாசம்சங்கின் அதிக ரெசல்யூஷன் கொண்ட சென்சார் ஆகும். இது 0.8 மைக்ரோமீட்டர் பிக்சல் கொண்ட சென்சார் ஆகும். இதில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிகசல்களை ஒன்றிணைக்கிறது. பின் ரெமோசைக் எனும் வழிமுறையில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை இது வழங்கும்.

சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த சென்சார் அதிக துல்லியமாக 64 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். பிரைட் GW1 சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் வழங்கப்பட்டுள்ளது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றும். இந்த சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதியை 100 டெசிபல்கள் வரை சப்போர்ட் செய்யும்.

மேலும் இந்த சென்சார் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் வசதியை வழங்கும். வீடியோவை பொருத்தவரை நொடிக்கு 480 ஃபிரேம்கள் வீதம் (480 FPS) ஃபுல் ஹெச்.டி. ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும். இத்துடன் சினிமா தர ஸ்லோ-மோஷன் வீடியோ கேப்ச்சர் வசதியும் கொண்டிருக்கிறது.

64 எம்.பி. சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். சாம்சங் ஏற்கனவே 48 எம்.பி. ISOCELL GM1 சென்சார் கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.