ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடும் தாமதமாகிறது

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேட் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்கூட்டியே அறிமுகம் செய்த நிலையில், இதுவரை அவை விற்பனைக்கு வரவில்லை. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனை தாமதமாகி இருக்கிறது.

இந்நிலையில், சாம்சங் போன்ற சூழ்நிலையை தவிர்க்கும் நோக்கில் ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை செப்டம்பர் மாத்திற்கு ஒத்துவைத்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு எதிர்கொண்ட பிரச்சனைகளை பார்த்து மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை முதற்கட்டமாக விமர்சனம் செய்வோருக்கு பிரத்யேகமாக வழங்கியது. விமர்சங்களின் போது சோதனை செய்யப்பட்ட கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளேவில் எளிதில் உடைந்து போனதால், அவற்றின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்களில் எவ்வித கோளாறும் ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்ய ஹூவாய் அவற்றை மீண்டும் சோதனை செய்ய துவங்கி இருக்கிறது. இதுதவிர மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாக இருப்பதால், ஏற்கனவே 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் இதன் விற்பனை முதற்கட்டமாக துவங்க இருக்கிறது.

அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூகுள், இன்டெல், குவால்காம் என பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் ஹுவாய் கூட்டணி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஹூவாய் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தனது சாதனங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகுமா அல்லது ஆர்க் ஒ.எஸ். கொண்டிருக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஹூவாயின் சொந்த இயங்குதளமான ஆர்க் ஒ.எஸ். ஆண்ட்ராய்டை விட 60 சதவிகிதம் வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.