ஆன்லைன் ஆர்டர்களை ஆளில்லா விமானத்தில் டெலிவரி செய்ய ஜொமாட்டோ திட்டம்

ஆன்லைனில் உணவை விநியோகம் செய்யும் ஜொமாட்டோ நிறுவனம் இந்தியாவில் ஆளில்லா விமானம் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் தொழிலநுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஹைப்ரிட் டிரோன் மூலம் நடத்தப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாக உணவுகளை டெலிவரி செய்ய ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஜொமாட்டோ திட்டமிட்டிருக்கிறது. உணவுகளை ஆளில்லா விமானம் மூலம் டெலிவரி செய்வதோடு மட்டுமின்றி, ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சரியாக மேற்கொள்ள குழு ஒன்றை நியமிக்க இருப்பதாக ஜொமாட்டோ தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமான சோதனை கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு முறையான அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கென பிரத்யேக பகுதிகள் உருவாக்கப்பட்டது. எனினும், சோதனை செய்யப்பட்ட பகுதி பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

தற்சமயம் பின்பற்றப்படும் விநியோக முறைகளில் உணவுகளை வழங்க குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் ஆகின்றன. இதனை பாதியாக குறைக்க ஜொமாட்டோ திட்டமிட்டுள்ளது. இதற்கு வான்வெளி தான் சரியானதாக இருக்கும். சாலை போக்குவரத்துகளில் இத்தனை குறைந்த நேரத்தில் விநியோகம் செய்வது சாத்தியமற்றதாகும்.

ஜொமாட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு டெக் ஈகிள் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கைப்பற்றியது. இதன் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும் நேரத்தை குறைக்க ஜொமாட்டோ திட்டமிட்டது. சோதனையில் பயன்படுத்தப்பட்ட ஹைப்ரிட் டிரோன் சுழலும் மற்றும் பொருத்தப்பட்ட இறக்கைகளை கொண்டிருந்தது.

சோதனையின் போது இந்த டிரோனில் அதிகபட்சம் ஐந்து கிலோ வரையிலான எடை வைக்கப்பட்டது. ஒவ்வொரு டிரோனும் முறையான பாதுகாப்பு விதிகளின் கீழ் கண்காணிக்கப்பட்டே டெலிவரி செய்யப்பட்டது.