விண்வெளியில் அடுத்த அதிரடி – சொந்தமாக ஆய்வு மையம் கட்டமைக்கும் இந்தியா

விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையத்தை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என இஸ்ரோவின் தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். சொந்த விண்வெளி ஆய்வு மைய திட்டமானது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் நீட்சியாக இருக்கும்.

“விண்வெளிக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பியதும் ககன்யான் திட்ட பணிகளை துவங்க வேண்டும். அந்த வகையில் இந்தியா சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்க இருக்கிறது,” என சிவன் தெரிவித்தார்.

முன்னதாக நிலவுக்கு பயணிக்கும் இந்தியாவின் இரண்டாவது திட்டத்தை சிவன் அறிவித்தார். சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தெற்கு பகுதியில் இதுவரை யாரும் அடையாத இலக்கில் கால்பதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை இந்தியா செப்டம்பர் 6 அல்லது 7 தேதிகளில் எட்டும் என தெரிகிறது. இதன் பின் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தான் இஸ்ரோவின் இலக்கு.

இந்த விண்கலம் சரியாக 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III மூலம் ஸ்ரீஹரிகோட்டோ ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய இருக்கிறது. சந்திர கிரகம் பயணிக்கும் விண்கலம் 3.8 டன் எடை கொண்டதாகும். இதில் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) என மூன்று மாட்யூல்கள் இருக்கின்றன.

சந்திராயன் 2 திட்டத்தின் மதிப்பு ரூ.603 கோடியாகும். ஜி.எஸ்.எல்.வி. மார்க் III கட்டணம் ரூ.375 கோடியாகும்.