ஹாங்மெங் மொபைல் ஓ.எஸ்.-க்கு டிரேட்மார்க் பெறும் ஹூவாய்

சீனாவின் ஹூவாய் நிறுவனம் தனது ஹாங்மெங் மொபைல் இயங்குதளத்துக்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹாங்மெங் எனும் இயங்குதளத்தை உருவாக்கி அதனை பயன்படுத்த கம்போடியா, கனடா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஐ.நா.வின் சர்வதேச காப்புரிமை அலுவலகங்களில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் தனது புதிய இயங்குதளத்தை ஆர்க் ஒ.எஸ். என்ற பெயரில் அழைக்கலாம் என கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை ஹூவாய் நிறுவனம் மே 27 ஆம் தேதி விண்ணப்பத்திருக்கிறது. அமெரிக்க வர்த்தக தடை ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்த பேக்கப் இயங்குதளத்தை ஹூவாய் வைத்திருக்கிறது என ஹூவாய் நிறுவன நுகர்வோர் பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு தெரிவித்தார்.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹூவாய் தனது மொபைல் இயங்குதளம் பற்றி அதிகளவு விவரங்களை வழங்கவில்லை. காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஹாங்மெங் இயங்குதளத்தை ஸ்மார்ட்போன், போர்டபில் கம்ப்யூட்டர்கள், ரோபோட்கள் மற்றும் கார் டி.வி.க்களில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.