கூகுள் பிக்சல் 4 அதிகாரப்பூர்வ டீசர்

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி இருப்பது பிக்சல் ப்ரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் பின்புறம் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் வழங்கப்படுகிறது.

கூகுள் தனது ஸ்மார்ட்போன்களில் கூடுதல் லென்ஸ்களை வழங்கும் பாணியை முந்தைய ஸ்மார்ட்போன்களில் தவிர்த்து வந்தது. எனினும், இந்த வழக்கத்தை கூகுள் தற்சமயம் பிக்சல் 4 சாதனத்திற்காக மாற்றிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ டீசரின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது. கேமரா ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போனின் மற்றொரு லென்ஸ் டெலிபோட்டோவா அல்லது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்சாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை பொருத்தவரை கூகுள் டு-டோன் பேக் ஃபினிஷிற்கு மாற்றாக புதிதாக ஆல்-கிளாஸ் பேக் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச் வடிவமைப்பை நீக்கி கேலக்ஸி எஸ்10 பிளஸ் போன்று பன்ச் ஹோல் கேமரா வழங்கலாம் என்றும் முன்புறமும் இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

எனினும், இதன் ரேம் மற்றும் மெமரி அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் போது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.