டெலிமார்கெடிங் ஊழல் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவர் டெலிமார்கெடிங் ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார்.

கிட்டத்தட்ட 24 பேரிடம் புதுவித ஊழல் மூலம் சுமார் பல லட்சம் டாலர்களை ஏமாற்றியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 21 வயதான பிஷ்வஜீத் குமார் ஜா அமெரிக்காவில் பயிற்சிக்காக சென்றுள்ளார். இவருடன் பல்வேறு பயிற்சி மாணவர்களும் அமெரிக்கா சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில், பிஷ்வஜீத் குமார் பலரிடம் இருந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையை திருடியதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. இவர் ஏமாற்றியவர்களில் பெரும்பாலானோர் 58 வயதில் இருந்து 93 வயதுடையவர்கள் ஆவர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இவர் மொத்தம் 9,37,280 டாலர்களை (ரூ.6,50,44,888) பலரிடம் இருந்து சுருட்டியிருக்கிறார். ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள் தொழில்நுட்ப உதவியை பெற்றதாகவே நினைத்திருந்ததாக ஃபெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிமார்கெடிங் ஊழலை கடந்த ஆண்டு நவம்பரில் நியூபோர்ட் காவல்துறையினர் கண்டறிந்தனர். பின் நீதிமன்ற உத்தரவுடன் பிஷ்வஜீத் குமார் இல்லத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் ஊழலில் தொடர்புடைய ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.