சிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்

இணைய உலகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். எனினும், இவ்வுலகில் அனைவரும் அவரவர் தேவைகள் மற்றும் கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை பரிசாக பெறுகின்றனர்.

இந்த காலத்து இணைய உலகம் நன்மையை மட்டும் வழங்குவதில்லை. தேடல்களுக்கு பதில் அளித்துவிட்டு, உடனே அதற்கான இலவச இணைப்பாக பிரச்சனையையும் வழங்கிவிடுகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் இண்டர்நெட் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

இணைய சேவையை அனைவரும் உண்மையில் இது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் முன்பின் அறியாதவர்களை தொந்தரவு செய்தல் மற்றும் மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ தினமும் இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

தினந்தோரும் பாதிக்கப்படுவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் இயங்க வைக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இந்த கேள்விக்கான விடையை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜிக்சா குழு ஈடுபட்டது. விடாமுயற்சியின் முதற்கட்ட வெற்றியாக 2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. (Perspective API) எனும் முறையை இக்குழு கண்டறிந்தது.

இந்த பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. முறையானது இணைய உரையாடல்களை சிறப்பானதாக மாற்றும் பணியை செய்ய முற்படுகிறது. மெஷின் லெர்னிங் மூலம் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு இவற்றை டெவலப்பர்கள், மாடரேட்டர்கள் மற்றும் அட்மின்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் விதமாக இந்த மென்பொருள் முறை பிரத்யேக கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரவும் தீய மற்றும் எதிர்மறை கரு்துக்களை தடுத்து நிறுத்துகிறது. இந்த எக்ஸ்டென்ஷன் டியூன் என அழைக்கப்படுகிறது. ஜிக்சா குழுவினர் உருவாக்கியிருக்கும் டியூன் எக்ஸ்டென்ஷன் மூலம் பயனர் கமெண்ட்களில் பார்க்க விரும்பாத தீய கருத்துக்களை தடுத்து நிறுத்த முடியும்.

Tune-Extension

டியூன் எக்ஸ்டென்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கும் சென் மோட் கொண்டு அனைத்து விதமான தீய கருத்துக்களையும் நீக்கிவிட முடியும். இந்த எக்ஸ்டென்ஷன் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கஸ் மற்றும் ரெடிட் என பல்வேறு பிரபல தளங்களில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூன் மெஷின் லெர்னிங் மூலம் இயங்குவதால், இது தொடர் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பாக செயல்பட துவங்தும். அதிகப்படியான தரவுகளை படிக்கும் போது புதிய கருத்துக்களை கவனித்துக் கொண்டு சரியாக செயல்படும்.

ஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது என்ற போதும், இந்த மென்பொருள் கொண்டு ஆன்லைன் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குரோம் எக்ஸ்டென்ஷன் என்பதால் இதனை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்துவிட முடியும்.

குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் பார்க்க விரும்பாத தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் சில கருத்துக்கள் சரியாக தடுக்கப்படாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும், வரும் காலங்களில் இந்த சேவை அதிகளவு மேம்படுத்தப்படலாம்.