பிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்

இந்தியாவில் பப்ஜி விளையாடிய பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.

இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என பப்ஜி மொபைல் டெவலப்பர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்வதற்கான வசதி இடம்பெறும் என தெரிகிறது.

பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ளவே விழைகிறோம். மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்க முயற்சிப்போம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.