பப்ஜி விளையாடிய பத்து பேர் கைது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி விளையாடியதால் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 2019 முதல் குஜராத் மாநிலத்தில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுக்க மொபைல் போனில் ஆர்மாக இருப்பவர்களை கண்கானிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்கோட் காவல் துறை அதிகாரிகள், சத்தமில்லாமல் நடத்திய விசாரணையின் போது பத்து பேர் பப்ஜி விளையாடியது உறுதி செய்யப்பட்டது. விளையாட்டில் ஆர்வமாக மூழ்கியிருந்தவர்கள் போலீசார் வருவதை கவனிக்காமல் மொபைல் திரையில் திளைத்திருந்தனர்.

பின் அவர்களது மொபைல்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களது மொபைலில் பப்ஜி இயங்குவதை உறுதி செய்து, எப்போதிருந்து அவர்கள் கேமினை விளையாடி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள கேம் ஹிஸ்ட்ரியை பார்த்தனர். அதில் அவர்கள் நீண்ட நாட்களாக பப்ஜி விளையாடியது உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களின் மீது ஆறு வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்கள் இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவது எங்களது கவனத்திற்கு வந்தது. மேலும் இந்த கேம் அவர்களது கல்வி, நடவடிக்கை மற்றும் மொழி வழக்கம் உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இந்தியாவில் பப்ஜி விளையாடியதால் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.