ஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு

அமெரிக்க அரசுடன் சட்டப் போராடம் நடத்தி வரும் ஹூவாவே, தனது வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள `பிளான் பி’ தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

சட்டப் போராட்டம் ஹூவாவே நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் சூழலில், ஹூவாவேயின் ஒட்டுமொத்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வியாபாரத்திற்கும் சிக்கல் ஏற்படும். இதனால் அந்நிறுவனம் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொண்டிருக்கும் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவுறலாம்.

இதுகுறித்து ஹூவாவே நிறுவன நுகர்வோர் வியாபார குழுவிற்கான தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு கூறும் போது, ஹூவாவே சொந்தமாக இயங்குதளங்களை உருவாக்குவதாக தெரிவித்தார். அமெரிக்க நிறுவனங்களுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், ஹூவாவேயின் சொந்த இயங்குதளம் பயன்படுத்துவதே எங்களது அடுத்தக்கட்ட திட்டமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஃபெடரல் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஹூவாவேயின் உபகரணங்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த அமெரிக்க அரசு விதித்த தடை சட்டத்திற்கு எதிரானது என ஹூவாவே தெரிவித்திருக்கிறது. தற்போதைய சூழலை பார்க்கும் போது, அமெரிக்க குடிமக்கள் ஹூவாவே பொருட்களை பயன்படுத்த எப்போது வேண்டுமானாலும் தடை விதிக்கப்படலாம் என்றே தெரிகிறது. இந்நிலையில், ஹூவாவே தலைமை செயல் அதிகாரி புதிய இயங்குதளம் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

புதிய இயங்குதளம் உருவாக்குவது பற்றி தெரிவித்திருந்தாலும், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன்ற இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளத்தை ஹூவாவே உருவாக்கிவிட்டதா? என்பது குறித்து ரிச்சர்ட் எவ்வித தகவலும் வழங்கவில்லை. அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாவேயுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய நிர்பந்திக்கப்படும் பட்சத்தில், புதிய இயங்குதளத்தை பயன்படுத்த முடிவு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றவே விரும்புவதாக ஹூவாவே தெரிவித்திருக்கிறது. இருநிறுவனங்களும் ஹூவாவேயின் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் சாதனங்களுக்கு இயங்குதளம் வழங்கி வருகின்றன.

ஏற்கனவே சிலமுறை ஹூவாவே சொந்தமாக இயங்குதளம் உருவாக்குவது பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. ஹூவாவேயின் இயங்குதளம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.