புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்குவோரிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டது. அதில் புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் எதிர்பார்க்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அப்படியாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 89 சதவிகிதம் பேர் தங்களது புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர். கேமராவை தொடர்ந்து பேட்டரி, ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரி உள்ளிட்ட அம்சங்களுக்கு பயனர்கள் முக்கியத்தும் அளிக்கின்றனர்.

புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பிராண்டு மோகத்தை தவிர்த்து, அதிக ஆய்வுக்கு பின்னரே ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர். ஸ்மார்ட்போன் தேர்வு செய்யும் போது, பயனர்கள் பொருளின் தரம், அதன் செயல்திறன், பொருளின் நம்பகத்தன்மை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் தரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிக போட்டி நிறைந்திருக்கும் சந்தையில், ஸ்மார்ட்போனின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனம் அதிக வெற்றி பெறும். இந்த காலத்து இந்திய நுகர்வோர் புதிய பொருள் வாங்கும் போது சாதனத்தின் தரம், அதன் வடிவமைப்பு மற்றும் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு கொண்டிருக்கிறதா என்பதில் அதிக கவனமாக இருப்பதாக சைபர்மீடியா ஆய்வு நிறுவனத்தின் நரிந்தர் குமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வு இந்தியா முழுக்க எட்டு நகரங்களில் பிப்ரவரி 2019 இல் நடத்தப்பட்டது. இதில் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் வருவாய் அடிப்படையில் வேறுபட்டிருந்தனர்.

ஸ்மார்ட்போன் தேர்வு செய்வோர் அளித்த பதில்களின் அடிப்படையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தனது மாபெரும் விற்பனை முனையங்களை கொண்டு சிறப்பான சர்வீஸ் வழங்குவதால் முதலிடத்திலும், ஒப்போ, சியோமி மற்றும் ரியல்மி உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.