ஸ்டெதோஸ்கோப் மூலம் இயற்கையை கேட்கலாம்

உடல்நிலை சரியில்லாத சமயங்களில் மருத்துவமனை செல்லும் போதெல்லாம் நம்மில் பலரும் இந்த சாதனத்தை பார்த்தும் நம் மீது பயன்படுத்தப்படுவதை உணர்ந்தும் இருப்போம். பல்வேறு நோய்களின் தன்மையை அறிய ஸ்டெதோஸ்கோப் எனும் எளிய சாதனம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சாதனமான ஸ்டெதோஸ்கோப்பை மற்றவர்களிடம் ஒருமுறையேனும் பயன்படுத்தி பார்க்க நம்மில் பலருக்கும் ஆசை இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் ஸ்டெதோஸ்கோப் என அழைக்கப்படும் இதை கொண்டு மருத்துவர் நமது சுவாசம், இதய துடிப்பு என நம் உடலினுள் ஏற்படும் ஒலியை கேட்பர். நம்முள் எழும் ஒலியை வைத்து நமது உடல் கோளாறுக்கான காரணம், அதற்கான தீர்வு உள்ளிட்டவற்றை மருத்துவர் வழங்க முற்படுவது அனைவரும் அறிந்ததே.

Stemoscope-1

வயர்களால் ஆன ஸ்டெதோஸ்கோப் காலம் மாறி தற்சமயம் வயர்லெஸ் முறையில் ஸ்டெதோஸ்கோப் உருவாக்கப்பட்டிருக்கிறது. வயர்லெஸ் சாதனமாக உருவாகியிருக்கும் இந்த ஸ்டெதோஸ்கோப் 1.5 இன்ச் அளவில் இருக்கிறது. எனினும், வழக்கமான ஸ்டெதோஸ்கோப்களை விட கூடுதல் வசதிகளை இது வழங்குவதால் இதன் பெயர் ஸ்டெமோஸ்கோப் என வைத்துள்ளனர்.

இதனை உடலின் அருகே கொண்டு செல்லும் போது, கையடக்கமாக இருக்கும் சாதனம் நம்முள் ஏற்படும் ஒலியை ப்ளூடூத் சிக்னல் மூலம் பயனரின் மொபைல் போனிற்கு அனுப்பி விடும். இந்த தகவல்களை ஹெட்போன்கள் மூலம் கேட்க முடியும். உடனுக்குடன் ஒலியை கேட்பது மட்டுமின்றி இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செயலி கொண்டு சிக்னல்களை பதிவு செய்து, பின் பயனர் விரும்பும் நேரத்திலும் அதனை கேட்டு ரசிக்கலாம்.

Stemoscope

இது நம் உடலினுள் ஏற்படும் ஒலியை கேட்க வழி செய்வதோடு மட்டுமின்றி உலகில் நம்மை சுற்றியிருக்கும் அனைத்து வித ஒலியையும் கேட்கச் செய்கிறது. உதாரணத்திற்கு மரங்களின் மீது இதனை வைத்தால் அதனுள் ஏற்படும் நீரேற்ற மாற்றங்கள், அவை அசைய முற்படும் போது ஏற்படும் ஒலி போன்றவற்றை கேட்கலாம்.

உடலினுள் நுரையீரல், இதயம், தசை, ஜவ்வுப்பகுதி, கழுத்து, கருவில் இருக்கும் சிசு, இரத்த அழுத்தம் போன்றவற்றின் ஒலியையும் இயற்கை மட்டுமின்றி செல்லப்பிராணிகளின் உடிலினுள் ஏற்படும் ஒலியையும் ஸ்டெமோஸ்கோப் கொண்டு மிகத்துல்லியமாக கேட்க முடியும்.