உள்ளங்கை அசைவில் அன்லாக் ஆகும் ஸ்மார்ட்போன்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் நிறைந்த சாதனங்களை அறிமுகம் செய்தன.

தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், 5ஜி உள்ளிட்டவை இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. இவற்றை நிறைவேற்றும் பொறுப்பை சாம்சங் மற்றும் ஹூவாய் தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. இவற்றுடன் 5ஜி சார்ந்து பல்வேறு சாதனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் பெயர்பெற்ற முன்னணி நிறுவனங்களுள் எல்.ஜி.யும் ஒன்று. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. ஜி8 தின்க் எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எல்.ஜி.யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி, முந்தைய தலைமுறை ஜி சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் மாடலை விட சற்றே உயர்வான அம்சங்களை ஜி8 தின்க் கொண்டிருக்கிறது.

LG-G8-ThinQ

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான சிறப்பம்சங்களை தவிர எல்.ஜி. சில புதுவித சிறப்பம்சங்களை வழங்கியிருக்கிறது. அந்த வரிசையில் வெயின் ஐ.டி., ஏர்-மோஷன் மற்றும் க்ரிஸ்டல் சவுண்ட் OLED பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எல்.ஜி. வெயின் ஐ.டி. தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை பயனரின் உள்ளங்கை ரேகை கொண்டு பாதுகாக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தை இயக்க பயனர் முதலில் தங்களது உள்ளங்கையை ஸ்மார்ட்போன் திரையில் காண்பிக்க வேண்டும். முன்பக்க கேமரா மற்றும் ஐ.ஆர். பிளாஸ்டர் சென்சார்கள் இணைந்து பயனரின் உள்ளங்கை ரேகைகளை பதிவு செய்ய சில நொடிகளை எடுத்துக் கொள்கின்றன. எல்.ஜி.யின் தொழில்நுட்பம் உள்ளங்கை ரேகையை பதிவு செய்ததும், ஸ்மார்ட்போனினை மிக எளிமையாக அன்லாக் செய்யலாம்.

இந்த அம்சம் புதிதாக இருந்தாலும், ஸ்மார்ட்போன் திரையில் உள்ளங்கையை காண்பித்து, அன்லாக் செய்வது சற்றே புதுவித அனுபவத்தை வழங்குகிறது. வித்தியாசமான புதிய தொழில்நுட்பம் என்பதோடு, பயனரின் உள்ளங்கை ரேகை சார்ந்து இயங்குவதால் இந்த நுட்பம் சரிவர இயங்க சிலகாலம் ஆகும்.

LG-G8-ThinQ-1

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஏர்-மோஷன் எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனினை தொடாமலேயே அதன் அம்சங்களை இயக்க வழி செய்கிறது. இதனை ஆக்டிவேட் செய்ய ஸ்மார்ட்போனின் திரையில் உள்ளங்கையை சரியான இடைவெளியில் காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் நாட்ச் பகுதியில் சிறிய நோட்டிஃபிகேஷன் லைட் தோன்றும்.

நோட்டிஃபிகேஷன் லைட் தோன்றும் போது உள்ளங்கையை சற்று உயர்த்த வேண்டும். இனி திரையில் உங்களது உள்ளங்கை வரைபடத்துடன் வலது மற்றும் இடதுபுறங்களில் இரண்டு செயலிகளை இயக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். உள்ளங்கையை அதற்கேற்ப அசைத்து குறிப்பிட்ட செயலியை இயக்க துவங்கலாம். புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியில் இயல்பான இரு செயலிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

எனினும், ஸ்மார்ட்போனின் செட்டிங் பகுதிக்கு சென்று பயனர்கள் இதனை மாற்றிக் கொள்ளும் வசதியை எல்.ஜி. வழங்கியிருக்கிறது. முந்தைய அம்சம் போன்றே துவக்கத்தில் இந்த வசதியை இயக்குவது சற்று சவலான காரியமாக இருக்கிறது என்றாலும், அதிகப்படியாக பயன்படுத்த துவங்கும் போது இது சீராகிவிடும் என எதிர்பார்க்கலாம்.

LG-G8-ThinQ-3

இவற்றுடன் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் க்ரிஸ்டல் சவுண்ட் OLED எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் மேல்பக்க திரையை ஸ்பீக்கர் போன்று பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது.

ஸ்மார்ட்போனின் மேல்புறம் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் ஸ்பீக்கர் நீக்கப்பட்டு புதிய தொழிலநுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிக இரைச்சல் மிகுந்த பகுதிகளில் இருந்து ஸ்மார்ட்போன் அழைப்புகளை ஏற்று பேசும் சமயத்தில், திரையை கன்னத்தின் மேல் வைக்கும் போது அதிக ஒலியை பிரதிபலிக்கச் செய்யும்.

எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
– கைரேகை சென்சார்
– 3D ஃபேஸ் அன்லாக்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
– DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
– 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.