உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் – சாம்சங்கை சாடிய ஹூவாய் மேட் எக்ஸ்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், ஹூவாய் தன் பங்கிற்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மேட் எக்ஸ் மாடலை பல்வேறு முதல் தர அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் உலகின் முதல் அதிவேக 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என ஹூவாய் தெரிவித்திருக்கிறது.

டெலிகாம் சேவையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் 5ஜி வசதியுடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை ஹூவாய் அறிமுகம் செய்துள்ளது. வடிவமைப்பில் உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹூவாய் மேட் எக்ஸ் உருவாகி இருக்கிறது. ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் 5.4 எம்.எம். அளவு தடிமனாகவே இருக்கிறது.

ஃபால்கன் விங் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் மாடலில் மடிக்கக்கூடிய கீல் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை மிக எளிமையாக மடிக்கவும், நீட்டிக்கவும் வழி செய்வதோடு சாதனத்தின் இருபுறங்களிலும் மென்மையான ஃபினிஷ் வழங்கியிருக்கிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவை பொருத்தவரை மடிக்கப்பட்ட நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் முன்பக்க பேனல், பின்புறம் 6.38 இன்ச் 2480×892 பிக்சல், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480×2200 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஹூவாயின் கிரின் 980 7 என்.எம். சிப்செட், டூயல் என்.பி.யு. மற்றும் பலோங் 5000 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா லெய்கா கேமராக்கள் – 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா கொண்டே செல்ஃபிக்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

என்.எம். கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால், இரண்டாவது சிம் சேவைக்கு என்.எம். கார்டு பயன்படுத்த வேண்டும். புதிய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உலகின் முதல் முறையாக 55 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 0 முதல் 85 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஹூவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் 19.5:9 OLED டிஸ்ப்ளே (மடிக்கப்பட்ட நிலையில்)

– பேக் பேனலில் 6.38 இன்ச் 2480×892 பிக்சல் OLED 25:9 டிஸ்ப்ளே

– 8 இன்ச் 2480×2200 பிக்சல் OLED 8:7.1 டிஸ்ப்ளே (திறக்கப்பட்ட நிலையில்)

– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்

– 720 MHz ARM மாலி-G76MP10 GPU

– பலோங் 5000 5ஜி மோடெம்

– 8 ஜி.பி. ரேம்

– 512 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1

– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8

– 16 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா

– 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4

– ஹைப்ரிட் டூயல் சிம்

– பக்கவாட்டில் கைரேகை சென்சார்

– டூயல் ஸ்பீக்கர்கள்

– 5ஜி மல்டி-மோட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி

– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 55 வாட் சூப்பர் சார்ஜ்

ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெலார் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 2299 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,85,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இந்த ஆண்டு ஜூன் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.