ஸ்மார்ட்போன் + டேப்லெட் = கேலக்ஸி ஃபோல்டு

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் வடிவில் உருவாகி இருக்கிறது என்ற அளவில் பலரும் நினைத்து கொண்டிருந்தனர். இதனை பொய்யாக்கும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர்களுக்கான நிகழ்வில் அந்நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை நிரூபித்தது.

இதன் தொடர்ச்சியாக சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆடம்பர சாதனம் என சாம்சங் வெளிப்படையாக அறிவித்துவிட்டது. ஆடம்பர சாதனம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் அமைந்திருக்கின்றன.

Galaxy-Fold-3

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கப்பட்ட நிலையில் கைகளில் கச்சிதமாக பொருந்திக்கொள்ளக் கூடியதாக 4.6 இன்ச் அளவிலும், திறக்கப்பட்ட நிலையில் பிரம்மாண்டமான 7.3 இன்ச் அளவு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களில் சாம்சங் முதல் முறையாக டைனமிக் AMOLED ரக திரையை வழங்கி இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனினை பலமுறை மிகசவுகரியமாக மடிக்கவும், நீட்டிக்கவும் ஏதுவாக ஸ்மார்ட்போனில் கீல் வழங்கப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டிருக்கும் கீல் இதன் முதுகெலும்பு போன்று செயல்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீல் மிக உறுதியாக இருப்பதோடு திறக்கப்பட்ட நிலையில் திரையின் கீழ் கச்சிதமாக மறைந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கக்கூடிய வசதியை தவிர இதன் ஸ்கிரீன், கேமரா மற்றும் மெமரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஃபோல்டு மாடலில் மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள்: 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4 – f/1.5 வேரியபிள் அப்ரேச்சர், OIS, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, முன்புறம் 10 எம்.பி. டூயல் பிக்சல் கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9, 8 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2 மற்றும் 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது.

Galaxy-Fold-2

மெமரியை பொருத்தவரை 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. எனினும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் இயக்குதளம் சீராக இயங்க வைக்க சாம்சங் கூகுளுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப், யூடியூப், மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் போன்ற செயலிகள் இரண்டு திரைகளிலும் சீராக இயக்கும் வகையில் பிரத்யேகமாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

மென்பொருள் ரீதியாக சிறிய திரையில் வீடியோக்களை பார்க்க நேரிடும் பட்சத்தில் வீடியோவை நிறுத்தாமல், ஸ்மார்ட்போனை திறந்து 7.3 இன்ச் திரையில் வீடியோவினை தொடர்ந்து பார்த்து ரசிக்கலாம். இதற்கென சாம்சங் App Continuity எனும் சிறப்பு மென்பொருளை வழங்கி இருக்கிறது. இத்துடன் பெரியை திரையில் வீடியோ பார்த்துக் கொண்டே சாட் மற்றும் பிரவுசிங் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் மூன்று செயலிகளை சீராக பயன்படுத்த முடியும்.

ஆடம்பர ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பக்கவாட்டில் கட்டைவிரல் படும் இடத்தில் சரியாக கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களுக்கு சக்தியூட்ட ஸ்மார்ட்போனின் இருபுறங்களிலும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்ள சிறப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இரு பேட்டரிகளின் ஒருங்கிணைந்த திறன் 4380 எம்.ஏ.ஹெச். என சாம்சங் தெரிவித்துள்ளது. இத்துடன் வழக்கமான வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

Galaxy-Fold-4

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலையை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.

சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் மென்பொருள் என மிகமுக்கிய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறது. அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும், வழக்கத்திற்கு மாற்றாக புதுவித வடிவமைப்பிலும் சாம்சங் உலகின் முன்னணி நிறுவனம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல்தலைமுறை மாடல் என்ற வகையில் கேலக்ஸி ஃபோல்டு மிக அற்புத சாதனமாகவே தெரிகிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் முதல் பார்வையில் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. எனினும், விற்பனை துவங்கி மென்பொருள் ரீதியில் இந்த சாதனத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்களை பொருத்தே இதன் வெற்றி அமையும்.

4 Comments

Comments are closed.