ட்விட்டர் தளத்தை அவசர காலத்தில் அதிகம் பயன்படுத்துவோர் இவர்கள்தான்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரபலங்களின் ஆதிக்கம் ஆர்ப்பரிப்பதாக நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

பல லட்சம் ஃபாளோவர்களுடன் ட்விட்டர் பிரபலங்கள் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றினாலும், சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் அதிக தீவிரமாக ட்விட்டர் பயன்படுத்துகின்றனர் என வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களை விட, குறைந்தபட்சம் 100 முதல் 200 ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களே ட்விட்டர் தளத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிக ஃபாளோவர்களை வைத்திருப்பவர்களை விட, குறைந்தளவில் மிக சரியான தொடர்புகளை வைத்திருப்போரை பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என ஆய்வில் பரிந்துரைக்கப்படுகிறது.

சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் ஆபத்து காலங்களில் அதிகளவு ட்விட்களை பதிவிட்டிருந்தனர். இவர்கள் பதிவிடும் பெரும்பாலான ட்விட்கள் மிகமுக்கிய தகவல்களை கொண்டிருந்ததாக ஆய்வுக் குழுவை சேர்ந்த பெஞ்சமின் எமிரி தெரிவித்தார்.

இவ்வாறான பயனர்கள் குறைந்தளவு ஃபாளோவர்களை கொண்டிருந்தாலும், இவர்களது ஃபாளோவர்கள் பெரும்பாலும் அதிகளவு நண்பர்கள், குடும்பத்தார் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வாறு நெருங்கிய உறவுகள் ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பலருக்கும் கொண்டு செல்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இயற்கை பேரிடர் போன்ற ஆபத்து காலங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் மீட்பு பணிகள் அல்லது நிவாரண பொருட்கள் பற்றியே அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றனர்.