க்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் குறித்து பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதில் ஆடியோவை வெளிப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை டிஸ்ப்ளேவினை எல்.ஜி. நிறுவனம் க்ரிஸ்டல் சவுண்ட் OLED என அழைக்கிறது.

எல்.ஜி. தனது ஜி சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்குவது இதுவே முதல் முறை என்ற வகையில் இதன் டிஸ்ப்ளே எல்.ஜி.யின் முந்தைய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

முந்தைய எல்.ஜி. ஸ்மார்ட்போன்களில் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்கென அந்நிறுவனம் கடந்த ஆண்டு பூம்பாக்ஸ் எனும் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் காலியாக கிடைக்கும் சிறுசிறு இடங்களை பயன்படுத்தி ஆடியோவை அதிக சத்தத்தில் ஒலிக்கச் செய்தது.

இதன் தொடர்ச்சியாக எல்.ஜி. இந்த ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவை பயன்படுத்தி ஆடியோ சத்தத்தை அதிகப்படுத்துவதோடு, அதனை ஆடியோ ஆம்ப்ளிஃபையர் போன்று இயக்குகிறது. புதிய வசதி சேர்க்கப்பட்டிருந்தாலும், முந்தைய லவுட்ஸ்பீக்கர் அம்சமும் இயங்கும் என்றே தெரிகிறது.

லவுட்ஸ்பீக்கர் மற்றும் டிஸ்ப்ளேவின் மேல் இருக்கும் ஆம்ப்ளிஃபையர் சீராக இணைந்து ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தும் பணியை செய்யும் என கூறப்படுகிறது. இவை வழங்கப்பட்டிருந்தாலும் புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஹை ஃபிடிலிட்டி குவாட் டி.ஏ.சி பில்ட்-இன், டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகிறது.