ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது

கூகுள் தனது I/O டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகுத்த இருப்பதாக அறிவித்தது.

கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் இந்த அம்சம் பற்றிய சோதனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் செயலி முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ தரவுகளை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.

கூகுள் மேப்ஸ் செயலி ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்றபோதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிந்தது, சீராக இயங்க துவங்கிடும். பின் மேப்ஸ் சரியான வழியை காட்ட துவங்கும் போது பயனர்கள் ஸ்மார்ட்போனை சகஜமாக பிடித்துக் கொள்ளலாம்.

புதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம்பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

தற்சமயம் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.