உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா?

ட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த சர்வதேச நிறுவனமான எலிமென்ட் ஏ.ஐ. உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முழுக்க அனுப்பப்பட்ட சுமார் 2,28,000 ட்வீட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதன்படி சுமார் 11 லட்சம் தவறான அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும் ட்வீட்கள் ஆண்டு முழுக்க பெண்களுக்கு அனுப்பப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோரில், ஒவ்வொரு முப்பது விநாடிக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்.

மேலும் பாதிக்கப்படும் பெண்களில் 84 சதவிகிதம் பேர் கருப்பின பெண்கள் என்றும், நிறத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பெண்களுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கப்படுவது ஆய்வில் உறுதியாகியிருக்கிறது.

Twitter-Icon-Women

“இப்பிரச்சனைகளை சரி செய்யாமல் இருப்பது ட்விட்டர் இதுபோன்ற குற்ற செயல்களை மூடிமறைப்பதற்கு சமம்”, என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மிலெனா மரின் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டர் தளத்தின் சட்டம், கொள்கை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவரான விஜயா கடே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் ஆரோக்கியமான சூழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடல்களின் நெறிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், “ட்விட்டரில் மெஷின் லெர்னிங் மற்றும் மனித குழுக்கள் இணைந்து குற்றச் செயல்கள் மீதான தகவல்களை ஆய்வு செய்து, அவை ட்விட்டர் விதிமுறைகளை மீறுகிறதா என கண்டறியப்படுகிறது” என விஜயா தெரிவித்தார்.

“அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆய்வின் படி, பிரச்சனைக்குரிய தகவல்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. எனினும் இவற்றை ட்விட்டரில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்களது தரப்பில் சர்வதேச அளவில் பொருந்தக்கூடிய விதிமுறைகளை கட்டமைக்க கடும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ள. மேலும் பொதுமக்களிடம் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது” என விஜயா தெரிவித்தார்.