2018 ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான அதிநவீன சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் சந்தை 2018-ம் ஆண்டில் பல சுவாரஸ்யங்களை கடந்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற மைல்கல்லை சில மாதங்களுக்கு முன் கடந்தது. ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்றது.

எனினும், உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆப்பிள் இழந்ததோடு அந்நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை. புதிய ஐபோன்களின் விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போனது சந்தை வல்லுநர்கள் உள்பட பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அமெரிக்க நிறுவனத்திற்கு இப்படியிருக்க தென் கொரிய நிறுவனமான சாம்சங் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்த போராடி வருகிறது என்றே கூறலாம்.

இவ்வாறு முன்னணி நிறுவனங்களுக்கே நெருக்கடி கொடுக்க யார் தான் காரணம் என்று பார்க்கும் போது, சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி, ஒன்பிளஸ், ஹூவாய், விவோ மற்றும் ஒப்போ போன்றவை நம் நினைவுக்கு வருகின்றன. சந்தையில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இந்நிறுவனங்களே கடும் போட்டியை ஏற்படுத்துகின்றன.

உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருக்கிறது. அந்த வகையில் இந்தியர்களை கவரும் வகையில் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ததே சீன நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களே வழங்க தயங்கும் அல்லது வழங்க முயற்சிக்கும் புதுவித சிறப்பம்சங்களை மிக எளிமையாக வழங்கி விடுகின்றன.

அவ்வாறு இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் நம்மை அதிகம் கவர்ந்த முற்றிலும் புதுவித சிறப்பம்சங்களை சற்று திரும்பி பார்ப்போம்.

iPhone-X-Screen

நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே அளவை பெரிதாக்க நினைக்கும் முயற்சியின் வெற்றி பிரதிபலிப்பாக நாட்ச் டிஸ்ப்ளே கிடைத்திருக்கிறது. 2017 மே மாத வாக்கில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் எசென்ஷியல் போன் இவ்வகை டிஸ்ப்ளேக்களை அறிமுகம் செய்தது. எனினும், 2017 செப்டம்பரில் ஆப்பிள் தனது ஐபோன் எக்ஸ் மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கிய பின் இந்த அம்சம் அதிகம் பிரபலமானது.

இதன் நீட்சியாக இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. சில மாடல்களில் நாட்ச் அளவும் குறைக்கப்பட்டு, நீர்துளி அளவில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. சமீப மாதங்களில் வெளியான பல்வேறு ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே முதன்மை அம்சமாக மாறியிருக்கிறது.

In-Display-Fingerprint-Sensor

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்:

ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கைரேகை சென்சார் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போன்களின் பின்புறம் பொருத்தப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார்கள், மெல்ல ஸ்மார்ட்போன்களின் ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டு தற்சமயம் டிஸ்ப்ளேயின் கீழ் பொருத்தும் அளவு தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

விவோ நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகிறது. 2019 ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் பரவலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple-Face-ID

ஃபேஸ் அன்லாக்:

ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சாருக்கு மாற்றாக கருதப்பட்ட ஃபேஸ் அன்லாக் வசதி, மொபைல் போன் பயன்படுத்துவோரின் முகத்தை பார்த்த பின்னரே ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும். அந்த வகையில் ஸ்மார்ட்போனினை அதன் உரிமையாளர் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலில் அறிமுகமான பின் இந்த அம்சம் அதிக பிரபலமானது. தற்சமயம் ஃபேஸ் அன்லாக் வசதி பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படுகிறது.

Dual-Cam-Smartphone

அதிநவீன பிரைமரி கேமரா:

இந்த ஆண்டு முழுக்க வெளியான ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்கள் புதிதாக பார்க்கப்படுகிறது. இதன் நீட்சியாக பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் அதிக கவனம் செலுத்தப்பட்ட அம்சமாக கேமரா இருந்தது எனலாம். பொதுவாக டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த பெருமை ஹெச்.டி.சி. நிறுவனத்தை சேரும்.

2011 ஆம் ஆண்டு ஹெச்.டி.சி. அறிமுகம் செய்த இவோ 3டி (HTC Evo 3D) ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வழங்கப்பட்டது. எனினும் இவை முப்பரிமான புகைப்படங்களை படமாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் பின் பல்வேறு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கின. 2014 ஆம் ஆண்டு ஹெச்.டி.சி. ஒன் எம்8 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கியது.

இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஹூவாய் பி9, எல்ஜி ஜி5 மற்றும் ஐபோன் 7 பிளஸ் உள்ளிட்டவை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகமாகின. இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் டூயல் கேமரா லென்ஸ் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்த, இன்று வெளியாகும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் டூயல் கேமரா லென்ஸ் இடம்பிடித்து விடுகிறது.

இதுதவிர சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பிரைமரி மற்றும் செல்ஃபி என்ற வாக்கில் இருபுறமும் டூயல் கேமரா என ஒரு ஸ்மார்ட்போனிலேயே நான்கு கேமராக்களை வழங்கத் துவங்கிவிட்டன. சாம்சங் சமீபத்தில் நான்கு பிரைமரி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் வரும் ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகளை எதிர்பார்க்கலாம்.

Vivo-Nex

பாப்-அப் கேமரா:

ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பாப்-அப் கேமரா அமைப்பை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளன. அதாவது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் இருக்கும் நாட்ச் மற்றும் இதர சென்சார்களை நீக்கி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் டிஸ்ப்ளே மட்டும் காட்சியளிக்கும்.

இனி ஸ்மார்ட்போனில் கேமராவிற்கென கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ததும், கேமரா யூனிட் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இருந்து மெல்ல உதயமாகும். சிறுசிறு மோட்டார்கள் மூலம் இயங்கும் படி பாப்-அப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர அவை பாப்-அப் ஆகும் போது பயனரின் சுவாரஸ்யத்தை அதிகமாக்கும் வகையில், பிரத்யேக ஒலி கேட்கும்.

ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் முற்றிலும் புதிதாக பார்க்கப்படும் இந்த தொழில்நுட்பம், ஒருகாலத்தில் நாம் பயன்படுத்திய ஸ்லைடர் மொபைல்களின் அதிநவீன நீட்சி என்றும் கூற முடியும். இவை தவிர இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா சென்சார் அம்சம் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் புதிதாக இடம்பெற்றிருந்தன.

AI-and-Augmented-Reality

ஏ.ஐ. மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் விளங்குகின்றன. ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேப்ஸ், ஆப்பிள் மேப்ஸ் போன்ற நேவிகேஷன் வசதிகள், விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளான கூகுள் அசிஸ்டண்ட், சிரி, கார்டனா போன்றவற்றை சீராக இயக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.

இதேபோன்று ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் கேமிங், பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்டவற்றை புதுவிதமாக கொண்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்களில் ஏ.ஐ. மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாடு துவங்கிவிட்ட நிலையிலும், வரும் ஆண்டில் இது பரவலான ஸ்மார்ட்போன்களில் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை உறுதிப்படுத்தும் வோல்ட்இ வசதி, தரவுகளை வேகமாக பரிமாற்றம் செய்யும் யு.எஸ்.பி. டைப்-சி, அதிகளவு ரேம், இன்டெர்னல் மெமரி, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் பிரதானமாக இருந்தன.