ரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகையில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

பத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தம் 20 ஜி.பி. டேட்டா பெற முடியும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.

பி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகை வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரூ.65 மற்றும் ரூ.95 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இரண்டு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. எனினும் இவற்றின் பலன்கள் மாறுகின்றன.

ரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் பயனர்களுக்கு ரூ.55 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நொடிக்கு 1 பைசா கட்டணத்தில் வசூலிக்கப்படுகின்றன. ரூ.95 விலையில் கிடைக்கும் சலுகையில் ரூ.95 டாக்டைம், 500 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்று ரூ.98 விலையில் சலுகையை வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.