மை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.

அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். செயலியை டவுன்லோடு செய்யும் போது 1 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை பி.எஸ்.என்.எல். செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட புது பி.எஸ்.என்.எல். செயலி கால்2ஆக்ஷன் கம்யூனிகேஷன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டு உள்ளது.

மேம்படுத்தப்பட்ட மை பி.எஸ்.என்.எல். செயலி 8 எம்.பி. அளவில் கிடைக்கிறது. செயலியை இன்ஸ்டால் செய்யும் பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பருடன் சைன்-அப் செய்ய வேண்டும். சைன்-அப் செய்ததும் 1 ஜி.பி. 2ஜி/3ஜி டேட்டா பயனர்களின் அக்கவுன்ட்டில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.

இலவச டேட்டா பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய இலவச டேட்டா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள் பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். அறிவித்திருந்தது.

வோடபோன், ஏர்டெல் போன்றே மை பி.எஸ்.என்.எல். செயலியிலும் பயனர்கள் தங்களது டேட்டா பயன்பாடு, அக்கவுன்ட் விவரங்கள், பிராட்பேன்ட் கட்டணம் செலுத்துவது மற்றும் பிரீபெயிட் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இந்த செயலியை கொண்டு போஸ்ட்பெயிட் பயனர்களும் தங்களது மாதாந்திர கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.