ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹூவாய் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினையும், பின் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பியாவுக்கான தலைவர் வின்சென்ட் பேங் அந்நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பியர்களுக்கு 5ஜி சேவைகள் அதிவேகமாக வழங்குவதில் ஐரோப்பியா தீவிரம் காட்டுவதாக தெரிகிறது என ஹூவாய் நுகர்வோர் வியாபாரக் குழு தலைவர் வால்டர் ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹூவாய் முதலீடு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் மட்டும் சுமார் 1300 முதல் 1800 கோடி யூரோக்களை முதலீடு செய்யும் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக ஹூவாய் இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி சாதனம் எவ்வாறு அழைக்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

எனினும், ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என பேங் தெரிவித்திருக்கிறார்.