மொபைல் பேட்டரி ஆயுளை 60% அதிகப்படுத்தும் புதிய வழிமுறை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

லண்டனில் இயங்கி வரும் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் ஆயுளை பெருமளவு மேம்படுத்திக் கொள்ளும் புது வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கை ஒன்றிணைத்து மொபைல் பேட்டரி பேக்கப் நேரத்தை மேம்படுத்தி்க் கொள்ளும் புது வழிமுறை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மொபைல் போன் செயலிகள் மொபைல் சாதனம் இன்றி கிளவுட் மூலம் இயங்கச் செய்து ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களின் பேட்டரி பேக்கப் நேரத்தை 60% வரை அதிகப்படுத்த முடியுமா என்ற வகையில் துவங்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் புது முயற்சிக்கு வெற்றிக் கிடைத்திருக்கும் நிலையில், புதிய வழிமுறை முதற்கட்டமாக மொபைல்-கிளவுட் ஹைப்ரிட் செயலியின் அதிக மின்திறன் பயன்படுத்தும் பாகங்களை கண்டறிந்து, பின் அவற்றை மொபைலில் இருந்து கிளவுடிற்கு ஆஃப்லோடு செய்கிறது.

இதன் மூலம் அதிக மின்திறன் பயன்படுத்தும் செயலி ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்டு கிளவுட் சக்தி மூலம் இயங்கச் செய்யப்படுகிறது. புதிய வழிமுறையினை ஆராய்ச்சியாளர்கள் கோட்-ஆஃப்லோடிங் (code-offloading) என அழைக்கின்றனர். இதில் சாதனத்தின் சொந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல், பேட்டரி ஆயுள் 60 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது. இதற்கு ஒரு எம்.பி. டேட்டா செலவாகும்.

பேட்டரி பேக்கப் நேரத்தை மேம்படுத்தும் புது வழிமுறையை கண்டறிந்த ஆமிர் அக்பர் கூறும் போது, “இதுவரை இரண்டு வெவ்வேறு ஆன்ட்ராய்டு செயலிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். ஒரு செயலியில் பேட்டரி பயன்பாடு 60 சதிவிகிதம் வரை குறைந்து இருக்கிறது, இதற்கு ஒரு எம்.பி. டேட்டா செலவானது. இரண்டாவது செயலியில், 35 சதவிகிதம் குறைவான மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது.”

மொபைல்-கிளவுட் கம்ப்யூட்டிங் புதிய வழிமுறை கிடையாது என்றாலும், ஆஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர்கள் பொதுப்படையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதே வழிமுறையை பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரோபோட்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் பணியாற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.