வாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் பிரபல அம்சங்களில் ஒன்றாக அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அன்சென்ட் அம்சம் இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இதேபோன்ற அன்சென்ட் அம்சத்தை தனது மெசஞ்சர் செயலியில் வழங்குவது பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சத்தை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை பயனர்கள் திரும்பப் பெறும் வசதி சேர்க்கப்படுகிறது.

மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை பயனர்கள் பத்து நிமிடங்களுக்குள் திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவலும் திரையில் தோன்றுகிறது.

ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு ஃபேஸ்புக் சர்வெர்களில் அப்படியே இருக்கும். இதன் மூலம் அழிக்கப்படும் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்படும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி மெசஞ்சரின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

புதிய அன்சென்ட் அமசம் மூலம் மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது.

மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும்.

இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.