ட்விட்டரில் விரைவில் எடிட் வசதி

ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும், பலருக்கும் அதிகம் தேவைப்படும் ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவல் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கக்கூடாது என்பதற்காக ட்விட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். மக்கள், ட்விட்டர் சேவையில் பிரச்சனையாக பார்ப்பதை நீக்கிவிட்டு, அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என டார்சி தெரிவித்தார்.

ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவதை பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்க முயற்சித்து வருகிறது. நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியில் இருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைதிருப்பும் வகையிலோ இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

ட்விட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கப்படுகிறது என 2016ல் டொர்சி தெரிவித்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.