பண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

இதில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர சாதனங்கள் அடங்கும்.

அக்டோபர் 9ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை Mi.com, அமேசான், ஃபிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுக்க நடைபெற்ற ஆஃப்லைன் வர்த்தகத்தில் இத்தகைய விற்பனை நடைபெற்றிருக்கிறது.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன், டி.வி. அணியக்கூடிய சாதனங்கள், பவர் பேங்க், ஹோம் செக்யூரிட்டி, ஏர் பியூரிஃபையர் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் சியோமி முதலிடம் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி விற்பனை விவரம்:

– ஃபிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும்.
– அமேசான் தளத்தில் 30 நாட்கள் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி 6ஏ இருக்கிறது.
ஸ்மார்ட்போன் பிரிவில் முதலிடம்.
– அதிகம் விற்பனையான டி.வி. பிரிவில் எம்.ஐ. எல்.இ.டி. டி.வி. மாடல்கள் முதலிடம்.
– அணியக்கூடிய சாதனங்களில் அதிகம் விற்பனையான மாடலாக எம்.ஐ. பேன்ட் 3 முதலிடம் பிடித்திருக்கிறது.
– பவர்பேங்க் பிரிவில் எம்.ஐ. பவர் பேங்க் முதலிடம்.
– அமேசான் வலைதளத்தில் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சியோமி மாடல்கள்.
– கடந்த ஆண்டு அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை விட எம்.ஐ. ஏர் பியூரிஃபையர் 2எஸ் 4.5 மடங்கு அதிக விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் சுமார் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு சிறப்பு விற்பனையில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் சியோமி பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.