சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் மார்ச் 2019ல் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சீரிஸ் பிப்ரவரி 2019ல் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியிடப்படலாம் என சாம்சங் நிறுவன தலைவர் கோ டாங் ஜின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறைந்தபட்சம் பத்து லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யப்படலாம் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1,770 டாலர்கள் (ரூ.1,28,935) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இது குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் உள்புற டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புறம் 4.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.