டிக்டொக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் சோதனை செய்து வந்த செயலியை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய செயலி லேசோ (Lasso) என பெயரிடப்பட்டுள்ளது.

புதிய லேசோ ஆப் பயனாளிகளுக்கு நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. லேசோ செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்கள் புதிய லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்ய முடியும். வைன்ஸ் ஆப் போன்றே லேதோ செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.

லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டு பயன்படுத்தலாம். பயனர்கள் செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.