நவம்பர் 14ல் புதிய பிராசஸர் வெளியிடும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் நவம்பர் 14ம் தேதி தனது புதிய எக்சைனோஸ் பிராசஸரை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய எக்சைனோஸ் பிராசஸரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

நவம்பர் 14ம் தேதி சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய பிராசஸர் தற்போதைய கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் எக்சைனோஸ் 9810 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட சிப்செட்டாக இருக்கும்.

புதிய பிராசஸரை சாம்சங் எவ்வாறு அழைக்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சாம்சங் முந்தைய வழக்கப்படி எண்ணியல் முறையில் பெயரிடும் என்றால் புதிய பிராசஸர் எக்சைனோஸ் 9820 என அழைக்கப்படலாம். புதிய பிராசஸர் சாம்சங் நிறுவனத்தின் முதல் 7 என்.எம். LPP வழிமுறையில் உருவாக்கப்பட்ட பிராசஸராக இருக்கும்.

இந்த தொழில்நுட்பம் 50 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தி, சாதனத்தின் செயல்திறனை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

Exynos-Launch-Poster

அறிமுக நிகழ்வு குறித்து சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசரில் “intelligence from within.” என எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய பிராசஸரில் நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம். முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் கேலக்ஸி எஸ்10 பிராசஸரில் பிரத்யேக நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் புதிய பிராசஸர் டூயல்-கோர் செயற்கை நுண்ணறிவு சிப் கொண்டிருக்கும் என்றும் இதனால் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் கொண்டு கடினமான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் அம்சங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எக்சைனோஸ் பிராசஸரில் 5ஜி மோடெம் வசதிக்கான சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் தனது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்க எக்சைனோஸ் 5100 மோடெம் ஒன்றை சாம்சங் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் 5ஜி வசதி கொண்ட தனி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.