சாம்சங் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது

ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் சமீப காலங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க துவங்கி இருக்கின்றன.

அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தொழில்நுட்பத்தை வழங்க மற்ற நிறுவனங்களை விட சாம்சங் வித்தியாசமாக முயற்சிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கலாம் என்றும், இதற்கென சாம்சங் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது.

பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்ட தகவல்களின் படி, கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு சாம்சங் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக இருக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பங்களை விட வேகமாக செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் 30 சதவிகித பகுதியை ஆக்கிரமித்து இருப்பதோடு, இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் குறிப்பிட்ட பகுதியில் சிறிய வட்டமாக இருப்பதால், புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கான புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கான புதிய சிப்களை சாம்சங் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாம்சங் புதிய தொழில்நுட்பத்தை மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.