விரைவில் வெளியாக இருக்கும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 2017ம் ஆண்டில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின், இந்த ஆண்டு துவக்கத்தில் நோக்கியா 8 சிரோக்கோ எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.

அந்த வரிசையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் கூகுள் ஏ.ஆர். கோர் சப்போர்ட் கொண்டிருக்கும் என முன்னதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

நோக்கியா 8.1 தவிர ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் ஏ.ஆர். கோர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த வசதி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஒன் சான்று பெற்ற சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. டிஸ்ப்ளே நாட்ச், மெட்டல்-கிளாஸ் பாடி கொண்டு உருவாகும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 7.1 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் நோக்கியா X7 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படும் நிலையில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் சற்றே மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது. புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.