உங்க போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி?

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்டிக்கர் வசதி வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்கள் மட்டுமின்றி பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

– முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

– இனி வாட்ஸ்ப் ஸ்டிக்கராக நீங்கள் பயன்படுத்த விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது.

– ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) போன்ற செயலிகளை பயன்படுத்தலாம். இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்த வேண்டும்.

Whatsapp-Personalised-Stickers

– புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக அதனை சரியான அளவில் கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும்.

– இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருந்தால் தான் அவற்றை வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் போன்று பயன்படுத்த முடியும்.

– இனி கூகுள் பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும். செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம்.