சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது.

சாம்சங் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனத்திற்கான செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கின்றனர்.

மடிக்கக்கூடிய போன்களில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. இதனை பாக்கெட்டில் எளிதில் வைத்து, எங்கும் பயன்படுத்தக் கூடிய டேப்லெட் ஆக இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இந்த சாதனம் விரிக்கப்பட்ட 7.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில் அதிக தடிமனான மொபைல் போன் போன்று காட்சியளிக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் கையில் வழங்கப்படவில்லை. விழா மேடையில் டெவலப்பர்களுக்கு காண்பிக்கப்பட்ட ப்ரோடோடைப் சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.