பென்ச்மார்க்கிங்கில் பட்டையை கிளப்பும் புது ஐபேட் ப்ரோ

ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட மேக்புக் ஏர் மற்றும் மேக் மினி சாதனங்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலை 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் வெளியிட்டது. அளவை தவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களின் செயல்திறனை அளவிடும் பென்ச்மார்க்கிங் தளத்தில் 2018 ஐபேட் ப்ரோ அபார புள்ளிகளை பெற்றிருக்கிறது. அன்டுடு (AnTuTu) எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் புதிய ஐபேட் ப்ரோ செயல்திறன் சார்ந்த புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஏ12எக்ஸ் பயோனிக் சிப் முந்தைய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ள ஏ12 பயோனிக் பிராசஸர்களை விட 50 சதவிகிதம் வரை சக்திவாய்ந்தது என அன்டுடு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 2018 ஐபேட் ப்ரோ அன்டுடு தளத்தில் மொத்தம் 5,57,679 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த புள்ளிகள் புதிய பிராசஸரில் உள்ள சி.பி.யு., யு.எக்ஸ், மெமரி மற்றும் ஜி.பி.யு. என நான்கு உபகரணங்களை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள பிராசஸர் மொத்தமாக 1,53,514 புள்ளிகளையும், 2018 புதிய ஐபேட் ப்ரோ மொத்தம் 3,15,108 புள்ளிகளை பெற்றிருக்கிறது.