நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?

ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்வதை விட, கடினமானது எந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்பதே பலரின் குழப்பமாக இருக்கும். ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு தேவையான பட்ஜெட் முடிவு செய்தபின் சந்தையில் அதே பட்ஜெட்டில் கிடைக்கும் பல்வேறு பிரான்டுகளில் சிறந்த பிரான்டு, நல்ல மாடல் ஸ்மார்ட்போனை தேர்வு செய்யும் போது பல்வேறு குழப்பமும், சந்தேகமும் மனதில் எழும்.

இவற்றைக் கடந்து கொடுக்கும் பணத்திற்கு ஓரளவு தரமான ஸ்மார்ட்போனை வாங்கும் முன் அவசியம் கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

குழப்பம் வேண்டாம்:

ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்ததும், அதற்கு எவ்வளவு செலவு செய்யலாம் என பலரும் முடிவு செய்திருப்பர். அந்த வகையில் ஸ்மார்ட்போனிற்கான பட்ஜெட் குழப்பம் பெரும்பாலும் ஏற்படாது. பட்ஜெட் முடிவு செய்ததும் முக்கியமான விஷயம் எந்த பிரான்டு ஸ்மார்ட்போனை வாங்குவது என முடிவு செய்வது தான்.

நல்ல ஸ்மார்ட்போன் பிரான்டை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். ஒவ்வொருத்தர் குறிப்பிட்ட பிரான்டு மீது நற்மதிப்பு கொண்டிருப்பர், சிலர் எந்த பிரான்டு என்றாலும் கொடுக்கும் பணத்திற்கு நல்ல ஸ்மார்ட்போன் கிடைத்தால் போதும் என நினைப்பர். அவ்வாறானவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

Smartphone-Pic-1

பயன்பாடு:

நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனின் பட்ஜெட், பிரான்டு முதலானவற்றை முடிவு செய்ததும் அதில் உங்களது பயன்பாடு எப்படி இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சிலர் தங்களது ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்க வேண்டும், சிறப்பான கேமரா இருக்க வேண்டும், மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக இருக்க வேண்டும், கேமிங் அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களை எதிர்பார்த்திருப்பர்.

இவ்வாறான அம்சங்களை தனித்தனியே சிறப்பாக வழங்கும் பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகள் இருக்கின்றன. எனினும் இவை அனைத்தும் நிறைந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகின்றன. எனினும் கேமிங் சார்ந்த அம்சங்களை வழங்கும் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வோர் அதில் அதிநவீன சக்திவாய்ந்த பிராசஸர், அதிக ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரி உள்ளிட்டவை இருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வு அவசியம்:

புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதை பற்றி நட்பு வட்டாரத்தில் விசாரிக்கும் முன், உங்களுக்கு விருப்பமான பட்ஜெட், பிரான்டு மற்றும் மாடல் பற்றி ஆன்லைனில் தெரிந்து கொள்ளுங்கள். பின் வட்பு வட்டாரம் மற்றும் நீங்கள் அறிந்த டெக்கி நண்பரிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்பதை தேட முற்படும் போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வலைதளங்களை பயன்படுத்தலாம். இந்திய ஆன்லைன் சந்தையில் விற்பனையாகும் பெருமளவு ஸ்மார்ட்போன்கள் இவ்விரண்டு தளங்களில் இருந்தே நடைபெறுகின்றன.

அவ்வாறு குறிப்பிட்ட வலைதளம் சென்று ஸ்மார்ட்போன்களுக்கான பிரிவில் உங்களது பட்ஜெட், பிரான்டு உள்ளிட்டவற்றை தேர்வு செய்து அவற்றில் உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்யலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போனிற்கு உங்களுக்கு முன் அந்த ஸ்மார்ட்போனை வாங்கி ஏற்கனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கொடுத்து இருக்கும் விமர்சனங்களை (Review) படிக்க வேண்டும்.

ஆன்லைன் தளங்களில் பொருட்களை தேர்வு செய்யும் முன் அதற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் மற்றும் எத்தனை பேர் அந்த பொருளை வாங்கியிருக்கின்றனர் என்ற விவரங்களை பரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகி இருப்பதோடு, பலர் நல்ல விமர்சனங்களை வழங்கி இருக்க வேண்டும். இவ்வாறு ஆன்லைன் விவரங்களை அறிந்து கொண்டதும், நட்பு வட்டாரத்தில் கலந்து பேசி நல்ல ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம்.

இதுவும் அவசியம்:

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் போது நீங்கள் தேர்வு செய்யும் பிரான்டு பிரபலமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அதன் சர்வீஸ் மையங்கள் உங்களது இருப்பிடத்தின் அருகாமையில் இருக்கிறதா என்றதும் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் பிரான்டுகள் விற்பனைக்கு பின் வழங்கும் சேவையை பற்றியும் நன்கு அறிந்து கொள்வது அவசியமாகும்.

இப்படி பல கட்ட ஆய்வு நடத்தி உங்களுக்கான ஸ்மார்ட்போனை தேர்வு செய்துவிட்டால், உடனடியாக அதனை வாங்கிவிடுங்கள். ஸ்மார்ட்போனினை வாங்கிய பின் அது பற்றிய விமர்சனங்களுக்கு செவி சாய்க்கமால் இருப்பது மன அமைதிக்கு வழி செய்யும். சிலர் வேண்டுமென்றே உங்களது பொறுமையை சோதிக்க உங்களின் புத்தம் புது ஸ்மார்ட்போன் பற்றிய புரளிகளை கூறி உங்களை வெறுப்பேற்றலாம். 🙂