இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்திக்கும் ஐபோன்

இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விற்பனை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடைய இருப்பதாக ஆய்வு நிறுவனமான கவுன்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.

மூன்றாவது காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் ஐபோன் விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்தார். தீபாவளி கால பண்டிகை விற்பனை ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக அமையவில்லை.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஐபோன்களை விற்பனை செய்திருந்த நிலையில், இம்முறை ஏழு முதல் எட்டு லட்சம் யூனிட்கள் வரை குறைவாக விற்பனையாகி இருக்கிறது என கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன தலைவர் நெயில் ஷா தெரிவித்தார்.

2018ம் ஆண்டு மட்டும் ஆப்பிள் நிறுவனம் சுமார் இருபது லட்சம் ஐபோன் மாடல்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு விற்பனையானதை விட பத்து லட்சம் யூனிட்கள் குறைவாக விற்பனையாகி இருக்கிறது. ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு சரிவுக்கு முக்கிய காரணிகளாக அதிக விலை, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை கூறப்படுகிறது.

ஐபோன்களின் விலை தொடர்ந்து அதிகமாகி வருவது, மற்றும் அதில் உள்ள சிறப்பம்சங்களும் அதிக கவர்ச்சிகரமாக இல்லை. ஆன்ட்ராய்டு பயனர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆப்பிளின் பிரான்டு மதிப்பு ஐபோன்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.