இந்திய மொபைல் போன் உற்பத்தி மூலம் 47 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற முடியும்

இந்திய மொபைல் போன் உற்பத்தி சந்தை 2025ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 23,000 கோடி டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் சுமார் 47 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு வரிவிதிப்பு மற்றும் எளிய வியாபார கொள்கை உள்ளிட்டவற்றில் அரசு சலுகைகளை வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும் என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால் இந்திய மொபைல் உற்பத்தி துறை தொடர்ந்து கணிசமான வளர்ச்சியடைந்து வருவதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 120 மொபைல் போன் உற்பத்தி ஆலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்திய மொபைல் போன் உற்பத்தி துறை உள்நாட்டு தேவைகளுக்காகவே பெரும்பாலான சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பின் அறிக்கையின்படி 2017ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மொபைல் போன்களில் மதிப்பு 2000 கோடி டாலர்களாகும், இதில் வெறும்10 கோடி டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

வரும் காலங்களில் உள்நாட்டு தேவை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2017 வரை இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 37 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆண்டு மதிப்பில் இதன் மதிப்பு 900 கோடி டாலர்கள் முதல் 2500 கோடி டாலர்கள் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்களும் அடங்கும்.

2014 முதல் 2017 வரை இருந்த வளர்ச்சி வரும் காலங்களில் குறையலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஆண்டு வளர்ச்சி இம்முறை 14 சதவிகிதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் குறைவு ஆகும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான இறக்குமதி வரியை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.