புது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்?

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும் தகவல்களில் இம்முறை கிடைத்திருக்கும் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அவர்களின் குறுந்தகவல்களும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை ஹேக்கர்கள் ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு 0.10 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7.28 பைசா எனும் கட்டணத்திற்கு விற்பனை செய்யப் போவதாக அச்சுறுத்துகின்றனர்.

புதிய தகவல் திருட்டு சம்பவத்தை ஃபேஸ்புக் மறுத்திருக்கும் நிலையில் ஹேக்கர்கள் பயனர் விவரங்களை மால்வேர் எக்ஸ்டென்ஷன்கள் மூலம் திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இம்முறை நடந்திருக்கும் தகவல் திருட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில அக்கவுண்ட்கள் லண்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்தவை என கூறப்படுகிறது.

பயனர் விவரங்களை வைத்திருக்கும் ஹேக்கர்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரங்களில் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்கள் ஒரு அக்கவுண்ட்டுக்கு 0.10 டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பதிவிட்டிருக்கும் விளம்பரத்தில் உதாரணமாக 81,000 பயனர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. எனினும் இந்த விளம்பரம் தற்சமயம் எடுக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து டிஜிட்டல் ஷேடோஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுமார் 12 கோடி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் திருடு போக அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் ஃபேஸ்புக் இத்தகைய தகவல்களை தவறவிட்டிருக்காது என தெரிவித்துள்ளது. மேலும் விளம்பரத்தில் பதிவிடப்பட்ட 81,000 ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் தனிப்பட்ட குறுந்தகவல்கள் இடம்பெற்றிருந்ததை டிஜிட்டல் ஷேடோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது.

பிரவுசர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு மால்வேர் நிறைந்த எக்ஸ்டென்ஷன்களை தங்களது ஸ்டோர்களில் இருந்து எடுத்து விடுமாறு கேட்டு கொண்டிருக்கிறோம். மேலும் சட்டத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை பட்டியலிட்ட வலைதளத்தை முடக்கி இருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரோஷன் தெரிவித்தார்.

பயனர்கள் எக்ஸ்டென்ஷன்களை டவுன்லோட் செய்யும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும், இவ்வாயறு செய்வோர் அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களின் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.