இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7. 53 எம்.பி. ஆக இருக்கிறது. இந்த தகவல் ஓபன் சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஏர்டெலை தொடர்ந்து மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்.பி., 4.92 எம்.பி. மற்றும் 2.70 எம்.பி. வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கின்றன.

ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா டவுன்லோட் வேகத்தில் 25 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதன் சராசரி டேட்டா வேகம் நொடிக்கு 9.96 எம்.பி. ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று இந்தியா முழுக்க 16 டெலிகாம் வட்டாரங்களில் ஏர்டெல் அதிவேக டேட்டா வழங்கி இருக்கிறது.

4ஜி டேட்டா அப்லோடு வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. ஐடியா 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 3. 93 எம்.பி. அப்லோடு வேகம் வழங்கி இருக்கிறது.

ஐடியாவை தொடர்ந்து வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.